Wednesday, August 09, 2006

Short Story :“தீர்ப்பிற்கு வராத வழக்கு”

இன்று தான் முதற்தடவையாக “கோர்ட்”டுக்குச் செல்லும் வாய்ப்பொன்று கிடைத்திருந்தது. வாய்ப்பு என்பதை விட கட்டாயம் என்று சொல்வது யதார்த்தத்திற்குப் பொருந்தும்.
என்னுடைய அக்காவைக் கைப்பிடித்தவனின் அட்டூழியங்களில் இருந்து அவளை விடுவிப்பதற்காக அவளது சம்மதத்துடன் விவாகரத்து வழக்கிற்கு வந்திருந்தோம். பேசி முடித்த திருமணம் தான். இருந்தாலும் எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்கும் என்று யார் கண்டது...?
எனக்குத் தெரிந்த நினைவு வரை விவாகரத்து வழக்கிற்காக யாருமே எமது குடும்பத்தில் இருந்து “கோர்ட்”டுக்கு வரவில்லை.
முதல் வழக்கு, திருமணமாகி ஒரு வருடம் கூடப் பூர்த்தியடையவில்லை போன்ற சில அடிப்படை “சென்டிமென்ட்”களினால் இந்த வழக்கு எல்லோரையும் நெகிழ வைத்திருந்தாலும், எனக்கென்னமோ ஒரு பாவமும் அறியாத அப்பாவி அவளை சந்தேகப்பட்டு உடல், உள ரீதியாக துன்புறுத்தி; “கணவன்” என்ற பெயரால் “கயவனாக” வாழ்ந்த ஒருவனிடமிருந்து அவளை மீட்கவேண்டும் என்ற உணர்வினால் அவளை சமாதானப்படுத்தியபடியே இருந்தேன்…
யார் என்ன சொன்னாலும் மனம் என்ற ஒன்று உண்டல்லவா…?
அவளிற்கு இது அதீத வலியைத் தந்தது என்பதை அவளது கண்களில் காணமுடிந்தது…
இருந்தும் அவளை தொடர்ச்சியாக ஆறுதல் படுத்தி “விடுதலை எண்டு நினையுங்கோ அக்கா” எனச் சொல்லியபடியே இருந்தேன்.
சிறிது தூரத்தில் “டை” கட்டி கல்யாண வீட்டிற்கு போவது போல வந்திருந்தான் எனதருமை அத்தான். அவனுடைய பிரச்சினையே எங்கு எப்படி வாழ்வது என்பது தெரியாதது தான்…
தான் யார் என்று கூட முழுமையாக புரிந்திராத அவனால் எப்படி என் அக்காவை வாழவைக்க முடியும்? என்ற கேள்வியோடு அவனில் நிலைகுத்தி நின்ற என் பார்வையைத் திருப்பிக் கொண்டேன்.
எனது அக்காவினுடைய இலக்கம் இறுதி கட்டத்தில் வரவேண்டியது என்பதால் அதுவரை நடந்த வழக்குகளில் நான் மூழ்கிப்போனேன்…
அது வேறு உலகம்! திருமணம், விவாகரத்து என்பதற்கெல்லாம் இருந்து வந்த பழைமை வாத கருத்துக்கள் தகர்த்தெறியப்பட்டுக் கொண்டிருந்தன…
கணவனின் பெயரை கூட தன் வாயினால் சொல்வது ஆகாது என்றிருந்த தமிழ் கலாச்சாரத்திற்கு அப்பால், இன்று ஆண்கள் செய்யும் கொடுமைகளை பட்டியலிட்டுச் சொல்வதற்கு உறுதியாக வந்திருந்தார்கள்.
காலம் மாறிப் போய்விட்டது என்பதை விட சந்தர்ப்பங்கள் அதிகரித்துவிட்டன என்றே கூற முடியும். ஏனெனில் இன்று பெண்கள் படித்திருக்கின்றார்கள், நாலு காசு சம்பாதிக்கின்றார்கள்…

காலம் பூராக கண்ணீரைச் சிந்திக் கொண்டு அவன் கட்டிய தாலியைச் சுமப்பதைவிட மெல்லிய புன்னகையுடன் தாலியில்லாமல் வாழ்வது ரொம்ப சௌகரியமாகவே போய்விட்டது.
ஒவ்வொரு வழக்குகளையும் பார்க்கப் பார்க்க “வாழ்க்கை” என்ற பதத்திற்கே அர்த்தம் தொலைந்து போவது மாதிரி உணர்ந்தேன்.
கணவனால் கைவிடப்பட்ட பெண், சொத்துக்களால் ஏமாற்றப்பட்ட ஆண்-பெண், பிள்ளைகளை வளர்க்க ஜீவனாம்சம் தேடி வந்த பெண் இன்னும் தள்ளாத வயது முதியோர் என பலதரப்பட்ட மக்கள் தம் நியாயத்திற்காக கூட்டில் ஏறி இறங்கியபடி இருந்தார்கள்…
ஒன்று மட்டும் புரிந்தது… யாரும் யாரையும் புண்படுத்தாத வாழ்வு வாழ்ந்தால் இந்த நீதி முறையின் தேவை யாருக்கும் இருக்காது! ஆனால் யாரும் அப்படி வாழ்வதாகத் தெரியவில்லை.
என் சிந்தனை ஓட்டத்தைக் கலைக்கும் வண்ணம் எனது அக்காவினுடைய இலக்கத்தை அழைத்தார்கள்.
கண்களால் அவளுக்குத் தைரியம் சொல்லியபடி அவளை அனுப்பிவைத்தேன். மறுபக்கத்தில் எதுவுமே அறியாத அப்பாவி போல அவனும் போய் நின்றான்.
உண்மை சொல்லுவதாக சத்தியப்பிரமாணம் செய்த அக்கா தொடர்ந்து அவளது பெயர், வயது, தொழிலைக் கூறி முடிக்கவும் அவளது வழக்கறிஞர் “ஏன் அவள் விவாகரத்து கேட்கிறாள்? ” என்பதை சொல்லத் தொடங்கினார்…
அவள் கூட்டில் ஏறிய அந்தக் கணம் என் உடல் சிலிர்த்துக் கொண்டது… மறுபக்கத்தில் தெரிந்த அவனைப் பார்க்கிறேன்… உடல் பதறியது. இறுதியாக அவளை கூட்டுக்குள் ஏற்றி விட்டாயே என எண்ணும் போது கண்கள் கலங்கின…
அங்கு தான் எனக்குள் இருந்த என்னை நான் உணர்ந்தேன்… அவளுக்கு நான் நேர்மாறு… வீட்டார், சுற்றத்தார் எதிர்க்க எதிர்க்க நானும் ஒருவனை காதலித்திருந்தேன். என்ன வித்தியாசம்! அவளுக்கு நேர்ந்தது பெற்றோர் பார்த்த வரனால்… எனக்கு நேர்ந்தது நானே தேடிக் கொண்ட வரனால்…
அவளுக்கு அவன் அடித்த போது ஆறுதல் படுத்த ஆயிரம் பேர். ஆனால் எனக்கு விழுந்த அடிகளைப் பற்றி அந்த ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம்.
அந்த கூட்டுக்குள் என்னையும் எதிரில் நின்ற அத்தானுக்குப் பதிலாய் என்னால் பிரியப்பட்ட காதலனையும் நிறுத்திப் பார்க்கின்றேன்…
நிச்சயம் திருமணம் முடிந்திருந்தால் எனக்கும் இந்தக் காட்சி நடந்தேறி இருக்கும்… நல்ல வேளை…
ஆறு வருட காதலை அடிவாங்கி வாழமுடியாத பட்சத்தில் முறித்துக் கொண்ட நல்ல நிகழ்வை நினைத்துப் பார்க்கின்றேன்…
நெஞ்சம் விம்மிய போதும் எடுத்துக் கொண்ட சரியான முடிவு இவ்விடத்தில் சந்தோஷத்தை தந்தது…
மெல்ல என்னைச் சுதாகரித்து நினைவுகளில் இருந்து விடுபட, அவளும் கூட்டில் இருந்து இறங்கி வர நேரம் சரியாக இருந்தது…
அவளிற்கு மூன்று மாதத்திற்குள் விவாகரத்து கிடைத்து விடும். அவளது முகத்தில் சந்தோஷம், எனக்கும் தான்! என் விடுதலை பற்றி…
ஆனால் அவளுக்காக சந்தோஷப்படுவது போல் காட்டிக்கொண்டேன். வெளியில் வந்து “ஆட்டோ” பிடித்து வீடு வரும் போது… பல கதைகளுக்கிடையில் “இப்போதுதான் பல்கலைக்கழகத்தில் நீ இறுதி வருடம் என நினைத்துக் கொள்! (அப்போது தான் அவளிற்கு இந்தத் திருமணம் பேசப்பட்டது) நீ பழைய அக்கா… இன்றிலிருந்து உனக்கு புது வாழ்க்கை என்றேன்… சிரித்தாள்…
அப்படி என்றால் நான்… ஆம் ஆறு வருடத்திற்கு முன் செல்ல வேண்டும். இப்போது தான் எனக்கு ஏ.எல்(high school) பெறுபேறு வந்திருக்கின்றது…
இன்றிலிருந்து எனக்கும் புது வாழ்க்கை….
மனதிற்குள் சிரித்த படி அவளைப் பார்க்கின்றேன்…
“உன்னுடையது தீர்ப்பிற்கு வந்த வழக்கு… என்னுடையதோ தீர்ப்பிற்கே வராத ஆனால் தீர்க்கப்பட்ட வழக்கு” என சொல்ல நா துடித்தது…
இருந்தும் என்னை மெல்லக் கட்டுப்படுத்தி, “ஆட்டோ” வின் வேகத்தால் காற்றலை பட்டு முகத்தில் விழுந்த முடிக்கற்றைகளை மெல்ல ஒதுக்கி விடுகின்றேன்…

0 Comments:

Post a Comment

<< Home