Monday, August 07, 2006

Poem :கறுப்பும் சிவப்பும் நீலமும் !!!

நெடுவான நீட்சியில்
கிறங்கிக் கொள்ள
துடித்தாலும்
எச்சில் இலையில்
சப்பித் துப்பிய
எலும்புகளுக்கான போட்டியில்
உலர்ந்து விடுகிறது மனது!

பிறந்த பிஞ்சுகளுடன்
பிச்சை எடுக்கும்
சோகமும்
சீழ் வடியும் கால்களுடன்
ஊர்ந்து திரியும்
அவலமும்
மாறுவதாகத் தெரியவில்லை.

சாக்கடைகளின்
வெதும்பிய மணமும்
கொசுக்களும் நுளம்புகளும்
வீதியோர
பத்து ரூபாய்கான
விபச்சாரங்களும்
இன்னும் என் தேசத்தின்
சொத்துக்கள் தான்?

நாய்களுக்கு மாருதிகளும்
மனிதர்களுக்கு தெருவோரங்களுமாக
வாகனப் புகையின்
தூசி படர்ந்து
கறுப்பு நிறமாகத்தான்
இருக்கிறது
எங்கள் வறுமை.

போரின்
செங்குருதி
சிந்தப்பட்டிருந்தும்
சுனாமியின்
நீல அலைகள்
ஆக்கிரமித்திருந்தும்
கறுப்பு நிறமாகத்தான்
இருக்கிறது
எங்கள் தேசம்!

இன்னும்
அடர்ந்து படர்ந்து
கறுப்பு நிறமாகத்தான்
இருக்கிறது
எங்கள் வறுமை?!!!

0 Comments:

Post a Comment

<< Home