Wednesday, August 09, 2006

Short Story : பெண்ணைப் பெண்ணாக…….

இனிய இலையுதிர் கால மாலைப்பொழுது….
“பேர்ன்” நகர ரயில் நிலையத்தில் இறங்கி என் நண்பனைப் பார்க்க நடந்து கொண்டிருந்தேன்.
காலடியில் மிதிபட்டு சருகுகள் எழுப்பும் ஒலி மனதிற்கு இதமாக இருந்தது. சூரியனின் வெம்மை சுட்ட பொழுதும் எங்கிருந்தோ வந்த குளிர் காற்று என் முள்ளந்தண்டு வரை ஊடுருவிச் சென்றது.
குளிர் காற்றில் இருந்து தப்பிக்க என் நடையை விரைவுபடுத்துகின்றேன்.
ஐந்து நிமிட வேக நடையின் பின்னர் அந்த ஐந்து மாடிக் கட்டிடத்தின் முன்னால் நிற்கின்றேன்.
மாலை வேளை என்பதனால் இன்னும் கதவுகள் திறந்தபடியே தான் இருந்தன.
உள் நுழைந்து மூன்றாம் மாடியை அடைகின்றேன்.
அங்கு தான் அவன் தன்னை மறந்து ஆராய்ச்சிகளில் மூழ்கியிருப்பான்.
ஓ … சொல்ல மறந்துவிட்டேன்.. அவன் இரசாயனவியலில் டாக்டர் பட்டம் வாங்கியவன். இப்பொழுது ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றான்.
இந்தியன் ஆனாலும் தமிழன்.
“கனாக் காணும் காலங்கள் … கலைந்தோடும் நேரங்கள் … கலையாத கோலம் போடுதோ ….” என்ற 7ஜி ரெயின்போக்காலணி பாடல் காற்றில் மெல்ல தவழ்ந்து வந்தது.
ஓ …… அவன் உள்ளே தான் இருக்கின்றான்.
பாடல்களைக் கேட்டபடியே ஆராய்ச்சி பண்ணுவது அவன் வாடிக்கை ….
“ஹய் … என்ன நடக்குது?” என்றேன்.
பதிலுக்கு “ஹாய்” சொன்னவன் “பத்து நிமிஷத்தில் வேலை முடிஞ்சிடும் வெயிட் பண்ணு சேந்தே போய்க்கலாம்” என்றான்.
எம் இருவருடைய பீடங்களும் அருகருகே இருப்பதனாலும் இருவரும் ஒரே விடுதியில் வசிப்பதனாலும் மாலையில் ஒன்றாகச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தோம்.
என் நல்ல நண்பன்…ஆரம்பத்தில் தெரிந்தவர்கள் என்று யாருமே இருக்கவில்லை. அவன் தான் முதலில் நண்பனானான். அது மொழி இணைத்த பந்தம்.
பெரும்பாலும் நமது பேச்சு தமிழ் சினிமா பற்றியதாகவே இருக்கும். ஏனெனில் அரசியல், போராட்டம் பற்றிக் கதை வந்தால் அங்கு எம்மை அறியாமலே முரண்பாடுகள் தோன்றிவிடும். இந்த விடயத்தில் அவன் இந்தியனாகவும் நான் இலங்கைத் தமிழாகவும் பிடிவாதமாக இருக்கக் கற்றுக் கொண்டோம்.
இதைவிட குடும்பம், உறவு என்று கதை வரும் போது அங்கு இயல்பான அக்கறையை ஒருவர் மேல் ஒருவர் செலுத்துவதும் இருக்கத்தான் செய்தது.
போகும் வழியில் “இந்தியக் கடை” ஒன்றில் தொலைபேசி அட்டை ஒன்றை வாங்கிக் கொண்டான் … நிச்சயம் அது அவனுடைய அக்காவுடன் கதைப்பதற்காகத் தான் இருக்கும்.

அந்தப் பாசத்தினைப் பார்த்து பலதடவை நானே வியந்திருக்கின்றேன்
அப்படியொரு பாசம்.
காலையில் எழுந்தவுடன் ஒரு எஸ்.எம்.எஸ் எப்பொழுதெல்லாம் அக்காவை “மிஸ்” பண்ணுகின்றானோ அப்பொழுதெல்லாம் “மிஸ்ட் கோல்கள்” மாலையில் குறைந்தது அரை மணி நேர உரையாடல்.
பாசம் ஒரு மனிதனை எப்படியெல்லாம் கட்டிப்போடுகிறது என்று நினைத்துக் கொள்வேன்.
ஆனாலும் பின்பு, அக்கா தன் குடும்ப உறவில் சந்தோஷமாக இல்லை என்பதை அறிந்து கொண்டே போது தான் அவனின் அளவற்ற பாசத்திற்கு நியாயம் காண்பிக்க முடிந்தது.
வீட்டில் பேசி முடித்த திருமணம் தான். மாப்பிள்ளை “கட்டினா அக்காவைத் தான் கட்டிப்பேன்” என்று ஒற்றைக் காலில் நின்றாராம்.
எல்லாம் தாலி கட்டும் வரையில் தான். தாம்பத்தியத்திற்கு அறிகுறியாய் ஒரு குழந்தை வேறு.
அத்தோடு தொலைந்து போனது தான் வாழ்க்கை. மனைவி, பிள்ளையை அடியோடு கவனிப்பதில்லை. தேவைப்பட்டால் மட்டும் பார்த்துவிட்டு தன் தாய் வீட்டிலேயே தங்கிக்கொண்டிருந்தார் மாப்பிள்ளை. செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. அன்பாய் வெளியே அழைத்துச் செல்வதில்லை. ஏன் அன்பாய் பேசுவது கூட இல்லை. என் நண்பன் சொல்லித்தான் இப்பொழுது அவள் வேலைக்குச் செல்கின்றாள் தன் தாய்வீட்டிருந்து. அது கூட வேலைக்குப் போகும் அந்த கொஞ்ச நேரம் என்றாலும் அக்கா கவலையை மறந்து இருக்க வேண்டும் என்பதற்காகத் தானாம்.
கதையைக் கேட்கவே மனதுக்குள் ஏதோ செய்தது.
அக்காவின் மேல் இரக்கத்தை விட முகம் தெரியாத நண்பனின் அத்தானின் மேல் தான் கோபம் வந்தது …
“நான் மட்டும் அவனுக்கு மனைவியாக இருக்க வேண்டும். இந்த நேரத்திற்கு அவனை உண்டு இல்லை பண்ணியிருப்பேன் ” என நினைத்துக் கொண்டேன்.
அன்று இரவு நித்திரையேயில்லை. முகம் தெரியாத அப்பெண்ணின் சோகம் என்னை முழுதும் வியாபித்திருந்தது.
யன்னலினுடாக சூரியக் கதிர்கள் கண்களில் பட மெல்ல கண் விழிக்கின்றேன்.
ஓரிரு நிமிடங்களுக்கு கூசிய கண்களை இரண்டு கைகளாலும் துடைத்தபடி எழுந்து நாட்காட்டியைப் பார்க்கின்றேன் …
“ஓ … இன்று ஒக்டோபர் 20 …” எனது இன்னொரு நண்பனுக்குப் பிறந்தநாள். தொலைபேசியை எடுத்து அவனது இலக்கங்களை அழைக்கின்றேன். “ஹாய் ஹப்பி பேர்த்தே டூ யூ” என்றேன். பதிலுக்கு நன்றி கூறியவனிடம் “இண்டைக்கு மத்தியானம் என் ஹோஸ்டலுக்கு வாங்க. இரண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்” என அவனை மதியச் சாப்பாட்டிற்கு அழைக்கின்றேன்.
“பன்னிரெண்டு மணிக்குத் தான் வேலை முடியும். முடிய வாரன்” என்றான். அவன் இலங்கை அகதித் தமிழன். எனது பல்கழைக்கழக உணவுச்சாலைக்கு அடிக்கடி உணவு உண்ண வருவான். அப்படித்தான் அந்த நட்பு அறிமுகமானது…அவன் அதிகம் படித்திருக்கவில்லை. பதினெட்டு வயதிலேயே சுவிற்சலாந்திற்கு அகதியாய் ஓடிவந்தவன். பிழைப்பிற்காக இந்நாட்டு மொழியைக் கற்று ரெஸ்டோரண்ட் ஒன்றில் வேலை செய்கின்றான். இங்கு அகதி அந்தஸ்துப் பெற்று வாழும் ஆயிரம் இலங்கைத் தமிழர்களில் அவனும் ஒருவன்.
அவன் பெரும்பாலும் தமிழர்களின் போராட்ட வாழ்க்கை, அந்நிய தேசத்து வாழ்க்கை, குடும்பச் சுமைகள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பான்.
அதிகம் படித்திருக்கவில்லையே ஒழிய நிறையவே வாழ்க்கையில் அடிபட்டிருந்தான்.
அவன் உழைத்து தானும் வாழ்ந்து இலங்கையில் உள்ள அவன் குடும்பத்தையும் பார்க்கின்றான். அவனிற்கும் ஒரு அக்கா. அத்தான் நிரந்தரக் குடிகாரன். நான்கு பிள்ளைகள் வேறு. இவன் பனியிலும் குளிரிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை அவர் விஸ்கியிலும், பிராந்தியிலும் செலவழித்துக் கொண்டிருந்தார். குடித்துவிட்டு மட்டும் வீட்டிற்கும் வந்திருந்தால் பிரச்சினையில்லை. அதைவிட வீட்டிற்கு வந்து சத்தம் போடுவது, அக்காவிற்கு அடிப்பது, குழந்தைகளை படிக்கவிடாமல் செய்வது இவைதான் அவனை இன்னும் கவலைப்பட வைத்தது.
என்னைக் காணும் போதெல்லாம் அவனின் அக்கா பற்றியே பேசுவான்.
அவன் சோகம் அவன் விழி ஓரங்களில் தெரியும்.
மதியம் அவன் வர லேட்டாகி விட்டது. கூடவே எனக்கு சமையலில் ஒத்தாசை செய்தான்.
சமைத்து முடித்துப் பரிமாறிய போது “ஏழு வருடங்களுக்குப் பிறகு அக்காட கையால் சாப்பிடுறது போல இருக்குறது” என்றான்.
மெல்ல புன்னகைத்து அவனின் சந்தோஷத்தை உள்வாங்கிக் கொண்டேன்.
அப்போது தான் அந்த தொலைபேசி அழைப்பு அவனுக்கு வந்தது.
இலங்கையில் இருந்து அவனின் தம்பி.
“அண்ணா வீட்டிற்கு அவசரமாய் கோல் எடுங்கோ” என்று சொல்லிவிட்டு வைத்திருந்தான்.
இவன் தன்னிடமிருந்த தொலைபேசி அட்டைமூலம் மீண்டும் இலங்கைக்குக் கோல் எடுக்க அழைப்பை எடுத்தது அவனது அக்கா.
தொடங்கும் போதே அழுது கொண்ட தான் பேசினார். நான் அருகிலேயே நின்றதால் அக்கா கதைப்பது அப்படியே கேட்டது.
இன்றும் குடித்து விட்டு வந்திருக்கிறார் கணவன். இவன் அனுப்பும் வெளிநாட்டுக் காசின் சுகம் கண்டதாலோ என்னவோ கடந்த ஐந்து வருடங்களாக வேலைக்கே போவதில்லை. இன்று அக்காவை மாடிப்படிகளில் இருந்த தள்ளிவேறு விட்டிருக்கிறர்; நெற்றியில் காயம். “நாங்க சின்னப் பிள்ளைகளாக இருக்கேக்க எங்கட அப்பா எப்படியெல்லாம் எங்களை வளர்த்தார். ஆனா இண்டைக்குப் என்ர பிள்ளைகளுக்கு ஒரு குடிகார அப்பா அம்மாவை அடிக்கிர அப்பா. வேலைக்குப் போகாத அப்பா. நான் என்ன பாவம் செய்தனான்.” என்று விம்மி விம்மி அழுகிறாள்.
இந்த அழுகையோடு “தம்பி பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்கிறாள்.
“நல்ல வாழ்த்துச் சொல்றீங்க” என்று தொடங்கியவன் “இது நீங்க தேடின மாப்பிள்ளைதானே. காதலிக்கேக்க உங்களுக்கு தெரியேல்லயா அவர் ஒரு குடிகாரர் என்று” என ஏசுவதற்கு தொடங்கியவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை உடனே குரலை தாழ்த்தி “ ஆம்பிளைகள் என்றால் அப்பிடி இப்படி இருக்கத்தான் செய்வாங்க... அக்கா நீங்கதானே பொறுத்துப் போகோணும்” என்று ஆறுதல்படுத்தினான். பல நிமிடங்களுக்கு ஆறுதலாகவே கதைத்தவன் “காட் முடியப்போகுது… இரவு எடுக்கிறன்” என்று செல்லி அழைப்பை துண்டித்தான்.
“சாப்பிடுங்க..” என்ற எனது குரலுக்கு சுய நினைவுக்கு வந்தவன் “எப்படி சாப்பிடுறது பார்த்தீங்க தானே தினம் தினம் அக்கா படுற வேதனையை பார்த்தா அத்தானை விட்டுட்டு வா எண்டு சொல்ல நினைக்கிறன். ஆனா தம்பி நானே எப்பிடி அப்படி சொல்லுறது. அதனால பொய்யா ஆறுதல் செல்ல வேண்டி இருக்கு” என்றவன் கடமைக்காக இரு வாய் உண்டு விட்டு கையை கழுவிக்கொண்டான்.
அவனுக்காக நான் ஏற்பாடு செய்த சின்ன சங்தோஷமும் காற்றில் கரைந்து போகிறது.
பின்னேர வேலைக்கு நேரமாகிவிட்டதால் “பிறகு சந்திக்கிறன்” என்று கூறி விடைபெற்று அவன் சென்றாலும் என் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை “சே … பெண்ணா பிறந்தா அதுவும் நம்ம நாடுகளில் பிறந்தா எவ்வளவை அனுபவிக்க வேண்டியிருக்கு ” என்று மனதுக்குள் அழுது கொள்கின்றேன்.
மாலை வழக்கம் போல் என் விடுதியில், என் இந்திய நண்பனுடன் இரவு உணவு உண்டு கொண்டிருந்தேன். என் கை தானாகவே உணவை எடுத்து வாயில் வைக்கிறது … ஆனால் மனம் உணவில் வயிக்கவில்லை. மனத்தின் ஏதோ ஒரு மூலையில் இனம் புரியாத வலி.
இடையில் அவனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருக்க வேண்டும், உணவு உண்பதை நிறுத்தி விட்டு அதனை வாசிக்கிறான்.
விடயம் நல்லதல்ல என்பதை அவனது முகம் சொல்லிவிடுகின்றது.
“என்ன, ஏதாவது பிரச்சனையா?” என்றேன்
“இல்ல அக்கா எஸ்.எம்.எஸ் பண்ணியிருக்கா”
“என்ன இப்ப சாமம் மூன்று மணி இருக்குமா? அக்கா இன்னும் நித்திரை கொள்ளேலயா?”என்றேன்..
“தூக்கம் வந்திருக்காது அதனால பண்ணியிருப்பா” என்று சொன்னவன் சில விநாடிகள் மௌனத்தின் பின்.
“அத்தான் சொன்னாங்களாம், அக்கா விலகிப்போற மாதிரி தெரியுதாம்.
காரணம் தெரியல்லயாம். கவுன்சிலிங்குக்கு கூட்டி போகப் போறாராம்.
அக்காவும் ஆமான்னு சொல்லிட்டாங்களாம்” என்று கூறி முடித்தான்.
“குடும்பத்த கவனிக்க அக்கா வேலைக்குப் போனா ஏன் இந்த மனுசன் இப்படி பண்ணுறார். புருஷன் மாதிரி நடக்கத் தெரியேல்ல. அவருக்கு தான் முதல்ல கவுன்சிலிங் பண்ணேனும். எதுக்கு இப்படி அக்காவ சித்திரவதை பண்ணுறார் என்றே புரியல்ல” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தான்.
“நாளைக்கு காலேல அக்காவுக்கு போன் பண்ணோணும்.என்ன சொல்றது
பொறுத்துப் போங்க என்று மட்டும் தானே சொல்லேலும். “ என்றவன் பாதியிலேயே உண்பதை நிறுத்திக் கொண்டான்.
“மனசு சரியில்ல. நான் தூங்கப் போறன். விடியப் பாக்கலாம்.” என்றவன் என் பதிலுக்கு காத்திராமலே வெளியேறி அவன் அறைக்கு போகின்றான்.
அமைதியாக கோப்பைகளை கழுவி அடுக்கி வைத்துவிட்டு எனது அறைக்குள் வருகின்றேன்…மதியம் ஏற்பட்ட வலியின் ரணம் குறைவதற்கு முன்னர் மீண்டும் வலி.அது எப்படி மனைவிமார்களை உடலாலும் மனதாலும் துன்புறுத்துவதற்கு சொந்தக் கணவர்களுக்கு மனது வருகிறது?
எனது மேசை விளக்கின் சுவிட்சை “ஒன்” பண்ணுவதும் “ஒப்” பண்ணுவதுமாக எனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தேன்.
நாடு, இனம், குலம், கோத்திரம் என்ற எல்லாப் பேதங்களையும் கடந்து இன்னும் பெண்கள் ஏதோ ஒன்றுக்காய் அழுது கொண்டு தான் இருக்கிறார்கள் …
இதில் மட்டும் எந்த பேதமும் இல்லை.
அந்த நிமிடம் தான் இந்த ஜரோப்பிய கலாச்சாரத்தின் மீது எனக்கு உடன்பாடு ஏற்படுகின்றது. ஒரு ஆணைப்பிடிக்காவிட்டால் அல்லது அவன் வாழ்க்கைக்கு ஒத்துவரமாட்டான் என்றால் எந்தப் பெண்ணும் எந்த நேரத்திலும் விலகிக் கொள்ளலாம். விவாகரத்துக்கள் இங்கு சர்வ சாதாரணம். விவாகரத்தான பெண்களை நம்மூர் மாதிரி யாருமே எதுவும் சொல்லமாட்டார்கள். குடும்ப அலகுகள் சிதைந்து போனாலும் .. இங்கு பெண்கள் அழுவதைக் காணமுடியவில்லை.
நம்மூரில் மட்டும் அடித்தாலும், வதைத்தாலும் “கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன். “வாழுவதே கொஞ்ச காலம். அதற்குள் எத்தனை சொல்லமுடியாத வலிகளைத் தாங்குகிறாள் பெண்.
எனக்குள் உணர்வுகள் கலவையாகி என்னாலேயே புரிந்து கொள்ள முடியாத உணர்வு தோன்றுகின்றது. கோபம் வருகிறது. அதுவே கவலையாகி அழுகை வருகின்றது. பெண்கள் அழாத ஒரு சமுதாயம் வெறும் கனவு தான்.
கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி நித்திரை கொள்வதற்குத் தயாராகின்றேன்.
முகம் தெரியாத அத்தான்மார்களில் இருந்த என் கோபம். என் இரு நண்பர்களையும் நினைக்க இரக்கமாக மாறுகின்றது.
எங்கோ உணரப்படும் வலிகளுக்கு எங்கோ கண்ணீர் சிந்தப்படுகின்றன.
அதைத் தான் என்னால் தாங்கமுடியவில்லை.
இந்த எல்லா உணர்வுக் கலவைகளுக்கும் மேலாக மெல்லிதான சந்தோஷம் ஒன்று என்னுள் பரவுகின்றது” அது தான் என் இலங்கை நண்பனும் என் இந்திய நண்பனும் தம் தாய்நாடுகளில் ஒவ்வொரு பெண்களுக்கு வாழ்வளிப்பார்கள். கணவர்களாக மாறுவார்கள். ஆனால் நிச்சயமாக தமது அக்காமார்களுக்கு நடந்த துன்பங்களை தம் மனைவிகளுக்கு கொடுக்கமாட்டார்கள்
அந்த பெண்களின் உடலுக்கும் உணர்வுக்கும் மதிப்பளிப்பார்கள்
மனைவியை மனைவியாக, பெண்ணாக நடத்துவார்கள் ……”
அந்த மெல்லிய ஆனால் நிஜமான சந்தோஷத்துடன் உறங்கிப் போகின்றேன் …!

1 Comments:

Anonymous Anonymous said...

Excellent

10:27 AM  

Post a Comment

<< Home